|
எங்களைப் பற்றி
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (National Translation Mission - என்டிஎம்) என்பது மொழிபெயர்ப்பை
ஒரு தொழில்துறையாக உருவாக்கவும் அறிவுசார் நூல்களை மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும்
இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதன் மூலம் உயர்கல்வியை எளிதாக்கவும் இந்திய அரசால்
தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். மொழித்தடைகளைக் கடந்த அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது
இத்திட்டத்தின் நோக்கம். மொழிபெயர்ப்பு வாயிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது
பட்டியலில் உள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் அறிவை எடுத்துச் செல்லுதல் தேசிய மொழிபெயர்ப்புத்
திட்டத்தின் இலக்காகும்.
கீழ்காணும் பல்வகை முயற்சிகளும் இதில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன: • மொழிபெயர்ப்பாளர்களுக்கான
பயிற்சி • மொழிபெயர்ப்புகளை வெளியிட வெளியீட்டாளர்களை ஊக்குவித்தல் • வேற்று மொழிகளிலிருந்து
இந்திய மொழிகளிலும், இந்திய மொழிகளிலிருந்து வேற்று மொழிகளிலும் மேலும் இந்திய மொழிகளுக்கிடையேயும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களுக்கான தரவுத்தளங்களை உருவாக்கிப் பராமரித்தல் • மொழிபெயர்ப்பு
தொடர்பான அனைத்துத் தகவல்களுக்குமான ஒரு தகவல் பரிமாற்ற மையமாக உருவாகுதல் இப்படிப்பட்ட
முயற்சிகளின் வாயிலாக, இந்தியாவில் மொழிபெயர்ப்பை ஒரு தொழிற்துறையாக உருவாக்கும் பணியில்
என்டிஎம் முனைந்துள்ளது. மொழிபெயர்ப்புக்கள் புதிய கலைச்சொற்களும் உரையாடல் பாணிகளும்
உருவாக வழிவகுக்கும். மொழிகளை நவீனப்படுத்துதலும் இதனால் எளிதாகவும் இயற்கையாகவும்
நிகழும். இவ்வகை நவீனப்படுத்துதலில், குறிப்பாக, இந்திய மொழிகளில் கல்விசார் உரையாடல்
பாணிகளின் நவீனப்படுத்துதலில், மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
அறிவுசார்நூல்கள் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பை ஒரு தொழிற்துறையாக உருவாக்கும் இலக்கை
அடைவதற்கான முதற்படியாகும். இதில் அறிவைப் பரப்புவதற்கு உதவும் அனைத்து எழுத்திலக்கியங்களும்/நூல்களும்
என்டிஎம்மில் ‘அறிவுசார் நூல்கள்’ என்றறியப்படும் தொகுதியினுள் அடங்கும். உயர் கல்வியில்
கற்பிக்கப் பயன்படுத்தப்படும் நூல்களை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதில் என்டிஎம்
தற்சமயம் ஈடுபட்டுள்ளது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்ககூடிய உயர்கல்வி
நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதின் மூலம் பூட்டிக்கிடக்கும் அறிவுப் புதையலை
அகழ்ந்து கொடுப்பதும் பரவச்செய்வதும் என்டிஎம்மின் எண்ணம். அனைவரையும் அகப்படுத்திய
ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இது வழிவகுக்கும் என்பதும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
|