நிகழ்ச்சிகள்

மொழிபெயர்ப்பு குறித்த கல்விசார் சொல்லாடல் உருவாகவும்; ஏற்கனவே இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அறிவுசார் நூல்கள் மதிப்புரை செய்யப்படவும்; புதியவர்களுக்கு மொழிபெயர்ப்புப் பயிற்சி அளிக்கவும்; செய்தி-தகவல்களைப் பரப்பவும் பணிப்பட்டறைகளையும், கருத்தரங்குகளையும், புத்தறிவுப்பயிற்சிகளையும் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் ஏற்பாடு செய்கிறது. என்டிஎம் நடத்தும் இந்நிகழ்ச்சிகளில் பங்குபெற்று விவாதிக்கவும் கலந்துரையாடவும் கற்றறிவாளர்களும், மொழிபெயர்ப்பாளர்களும், வல்லுநர்களும், வெளியீட்டாளர்களும் அழைக்கப்படுகிறார்கள்.
 

பணிப்பட்டறைகள்

மொழி உதவி குழுக்களின் வேலைகளைச் செயல்படுத்தவும்; ஒவ்வொரு பாடத்துறையிலும் நூல் தொடர்புக் கலைச்சொல்லகராதியை 22 மொழிகளில் உருவாக்கவும் பணிப்பட்டறைகளை என்டிஎம் ஏற்பாடு செய்கிறது. ஒரு நூலை மொழிபெயர்ப்பு செய்து முடித்தவுடன், ஒவ்வொரு மொழியிலும் உள்ள மொழி உதவி குழுவிலுள்ள அல்லது மொழி உதவி குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வல்லுநர்கள் ஒரு பணிப்பட்டறையில் சந்தித்து மொழிபெயர்ப்பட்ட நூலின் கைப்பிரதிகளை மதிப்புரை செய்து மொழிபெயர்பாளர்களுக்கு வழிகாட்டுவார்கள்.
 

கருத்தரங்குகள்

மொழிபெயர்ப்புத் தொடர்பான கல்விசார் கருத்துப் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக என்டிஎம் கருத்தரங்குகளை நடத்துகிறது. இக்கருத்தரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் மதிப்புரை செய்யப்பட்டு பெட்டகப்படுத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ஆண்டுக்கு இருமுறை வெளிவரும் என்டிஎம்மின் டிரான்ஸ்லேசன் டுடே ஆய்விதழிலும் வெளியிடப்படும். மொழிபெயர்ப்பு குறித்த கல்விசார் விவாதங்களின் தொகுப்பை உருவாக்க இக்கருத்தரங்குகள் என்டிஎம்மிற்கு உதவுகின்றன. இவை மொழிபெயர்ப்பியல் மற்றும் தொடர்புள்ள பாடத்துறைகளில் ஆர்வமுள்ளவர் களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் பெரிதும் உதவும்.
 

புத்தறிவுப்பயிற்சிகள்

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் பல்வேறு மொழிகளின் மொழிபெயர்பாளர்களுக்கென புத்தறிவுப்பயிற்சிகளை நடத்துகிறது. இந்தப் பயிற்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு மொழிபெயர்ப்பு பற்றியும், மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளும் அறிவுசார் நூல் மொழிபெயர்ப்பில் உள்ள பல வித பிரச்சினைகள் பற்றியும், பல்வேறு மொழிபெயர்ப்புக் கருவிகளையும் அறிமுகப்படுத்தி அவர்களை திறமையான மொழிபெயர்ப்பாளர்களாக ஆக்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வுமாணவர்கள் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் வெவ்வேறு பாடத் துறைகளைச் சார்ந்தவர்கள். பல்வேறு மொழிகளைப் பின்புலமாகக் கொண்டவர்கள். கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்களும், சார்பிலா மொழிபெயர்பாளர்களும், பல்வேறு தொழில் துறைகளைச் சார்ந்தவர்களும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். தேசிய மொழிபெயர்பாளர்கள் பதிவேட்டிலிருந்தும் கூட நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படும் கருத்துரைஞர்கள் மொழிபெயர்ப்பியல் மற்றும் தொடர்புள்ள பாடத்துறைகளைச் சேர்ந்தவர்களும் அல்லது இந்திய மொழிகளில் தொடர்ந்து அறிவுசார் நூல்களை வெளிக்கொண்டு வரும் எழுத்தாளர்களுமென இருதரப்புக்களிலிருந்தும் இருப்பார்கள். அறிவுசார் நூல்களை மொழிபெயர்த்து வரும் வல்லுநர்களும், இந்தியாவில் பல்வேறு மொழிகளில் துறைசார் கலைச்சொற்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் என்டிஎம்மின் கருத்துரைஞர்களாக செயல்படுவார்கள்.
 

மற்ற நிகழ்ச்சிகள்

நாடு முழுவதும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் கலந்துகொண்டு தன் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்ச்சியை என்டிஎம் மக்களிடையே ஏற்படுத்துகிறது. மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வெளிவந்தவுடன், அவற்றை விளம்பரபடுத்துவ தற்கான நிகழ்ச்சிகளையும் என்டிஎம் நடத்தும். எழுத்தாளர்கள் சந்திப்பு, மொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு முதலியனவும் இவற்றில் அடங்கும்.