கலைச்சொற்கள்

அறிவுசார் நூல்களை மொழிபெயர்ப்பதற்கு அடிப்படைத்தேவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொற்களை மொழிபெயர்த்து தரப்படுத்துவதாகும். கலைச்சொற்களைப் பயன்படுத்துவதில் இந்திய மொழிகளில் இதுவரை ஒத்த நிலை இருந்ததில்லை. தமிழ். வங்காளம் போன்ற மொழிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைசார் கலைச்சொல்லகராதிகள் கிடைக்கின்றன. மற்ற சில மொழிகளிலோ கலைச்சொல்லகராதிகளே இல்லாத நிலை உள்ளது. இந்திய மொழிகளில் கலைச்சொற்களைத் தரப்படுத்தும் வேலையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையத்துடன் (Commission for Scientific and Technical Terminology - CSTT) என்டிஎம் இணைந்து செயலாற்றுகிறது. தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இந்த முயற்சி, அரசியலமைப்புச்சட்ட 8-ஆவது பட்டியலில் உள்ள 22 மொழிகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொற்களை உருவாக்கி வரையறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையத்தின் கைகளை வலுப்படுத்தும். இது அறிவுசார் நூல்களை விரைவாகவும் சிறந்த முறையிலும் மொழிபெயர்க்கவும் வகை செய்யும்.