|
சட்ட வரைவு
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (NTM) இந்திய அரசின் அதிகார ஆணையின்படி மைசூரில் தலைமையகத்தையும்
டெல்லியில் ஒரு இணைப்பு அலுவலகத்தையும் கொண்டு எளிதில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (CIIL) இதன் இணைப்பு நிறுவனமாக இருக்கும். இந்தத்
திட்டக்காலத்தின் முடிவில், திட்டம் நன்றாக காலூன்றியதும் இந்திய மொழிகளின் நடுவண்
நிறுவனத்திலிருந்து தனியாகப் பிரித்து 1860 ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவுச் சட்டத்தின்
(Societies Registration Act – 1860, Central Act) கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயற்படுத்துவது
குறித்து தீர்மானிக்கப்படும்.
|
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் ஆட்சிக்குழுவின் கட்டமைப்பானது சிறிய அளவில் அதே
வேளையில் நீட்சித் தன்மைக் கொண்டதாகப் போதிய வசதிகளுடன் இருப்பதாக அமைக்கப்படும். ஆரம்பத்தில்
மூன்றடுக்கு நிர்வாக அமைப்பு இருக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் உருவாக்கப்படும்:
|
|
»
|
மாண்புமிகு மனித வள மேம்பாட்டு அமைச்சர் அவர்களைத் தலைவராக கொண்ட உறுப்பினர்களுடன்
கூடிய வழிகாட்டும் குழு1.
|
|
»
|
மூத்த கல்வியாளர் /அமைச்சகத்தின் நியமன உறுப்பினர் ஒருவரைத் தலைவராக கொண்ட ஆட்சிக்
குழு2 (GB). இக்குழு அவ்வப்பொழுது ஒன்று கூடித் திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும்.
|
|
»
|
101 பேர் உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு3 (GC) (தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில்
அங்கம் வகிக்கும் வகையில் கல்வி நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அல்லது தனிநபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்).
|
எனினும், தற்போது ஆலோசனைகளை வழங்கவும் திட்டத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் 25
உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட மேம்பாட்டு வாரியம்(NTM-PAC) அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இணைப்பு அலுவலராக இருப்பதால் இவ்வாரியத்தின் தலைவராக
இயக்குநர், இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம், மைசூர் அவர்கள் இருப்பார். தேசிய மொழிபெயர்ப்புத்
திட்ட இயக்குநர் நியமிக்கும் வரை திட்டத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும்
என்பதற்காக கல்விச் செயலர், இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம் (Academic Secretary, CIIL)
அவர்கள் இத்திட்டத்தின் உறுப்பினர்-செயலராக இருப்பார். இத்திட்டத்தின் மேலும் மூன்று
அலுவல்சார் உறுப்பினர்களாக, இணைச் செயலர் (மொழி) அல்லது இயக்குநர் (மொழி), உயர்கல்வித்துறை,
இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்கம் அவர்களின் பிரதிநிதியாக நியமன உறுப்பினர்
ஒருவர், இணைச்செயலர் மற்றும் நிதி ஆலோசகர் (JS & FA) அல்லது IFD(HRD) அவர்களின் பிரதிநிதியாக
நியமன உறுப்பினர் ஒருவர் மற்றும் தலைவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க
ஆணையம், டெல்லி ஆகியோர் இருப்பர்.
|
இவர்கள் ஐவர் மட்டுமல்லாமல், சுழற்சி முறையில் மேலும் இருபத்தைந்து உறுப்பினர்கள் பரிந்துரைகளின்
பேரில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்படுவர்: (அ)பல்கலைக்கழகங்களில்
மொழிபெயர்ப்பைக் கற்பிக்கும் துறைகளின் சார்பில் இருவர், (ஆ) மாநிலங்களின் பிரதிநிதிகளாக
இருவர், சுழற்சி முறையில் (மொழி மற்றும் மொழிபெயர்ப்பினைச் சார்ந்த கல்வி நிறுவனங்களில்
இருந்து), (இ) மொழி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஒருவர், (ஈ) நூல் விற்பனையாளர்கள்
மற்றும் பதிப்பாளர்களின் பிரதிநிதிகளாக மூவர், (உ) செயலர், சாகித்திய அகாதமி, (ஊ) இயக்குநர்,
நேஷனல் புக் டிரஸ்ட், (எ) மொழிபெயர்ப்புக் கருவிகள், தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காகப்
பாடுபடும் இந்திய அறிவியல் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற பிற நிறுவனங்களில்
இருந்து இருவர், (ஏ) ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதில் வல்லுநராக
உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் ஐவர், (ஐ) பல்வேறு புலங்களின் சார்பில் இருவர்,(ஒ) மொழிபெயர்ப்பு
நடவடிக்கைகளில் ஆர்வமுடைய தனியார் நிறுவனங்கள், சங்கங்கள் அல்லது தனிநபர்கள் சார்பில்
ஒருவர்.
|
மேற்குறிப்பிட்ட உறுப்பினர்களைத் தவிர, அறிவியல் மொழிபெயர்ப்பு, தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு,
உடனடி மொழிபெயர்ப்பு / பொருள்விளக்கம் அல்லது எந்திர மொழிபெயர்ப்புப் போன்ற வெவ்வேறு
துறைகளில் தனித்திறன் பெற்ற ஆலோசகர்கள், வல்லுநர்கள் உள்ளடக்கிய துணை வழிகாட்டும் குழுக்கள்,
செயல்முறைக் குழுக்கள் இத்திட்டத்தில் இருக்கும்.
|
1. முன்னதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசிய மொழிபெயர்ப்புத்
திட்ட வழிகாட்டும் குழுவானது 25 உறுப்பினர்களைக் கொண்டதாக, உயர் அதிகாரங்களைக் கொண்டதாக
இத்திட்டத்திற்கான முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கும் குழுவாக இருக்கும்.
2. பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பைப் பயிற்றுவிக்கும் துறைகள், மாநிலங்களில் மொழிபெயர்ப்பிற்காகப்
பெரிய அளவில் பாடுபடும் நிறுவனங்கள், தொழில்நுட்பக் கழகங்களின் பிரதிநிதிகள், நூல்
வெளியீட்டாளர்களின் பிரதிநிதிகள், மொழிபெயர்ப்பிற்கான மென்பொருட்கள், தொழில்நுட்பங்களைத்
தயாரிப்பதற்காகப் பாடுபடும் தேசிய அறிவியல், தொழில்நுட்பக் கழகங்கள், மொழிபெயர்ப்புப்
பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட இத்திட்டத்தின்
ஆட்சிக்குழுவானது உருவாக்கப்படும். மொழிபெயர்ப்பைப் பயிற்றுவிக்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களின்
புலங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் இருவர், சுழற்சி முறையில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள்
இருவர் (மாநிலங்களில் மொழிகள், மொழிபெயர்ப்பினைச் சார்ந்த பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்,
கல்விநிறுவனங்கள்), நூல்வெளியீட்டாளர்கள், நூல்விற்பனையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள்
மூவர், மொழிபெயர்ப்பிற்கான மென்பொருட்கள், தொழில்நுட்பங்களைத் தயாரிப்பதற்காகப் பாடுபடும்
தேசிய அறிவியல், தொழில்நுட்பக் கழகங்களின் பிரதிநிதிகள் இருவர், தேசியக் கல்வி, ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம், நேஷனல் புக் ட்ரஸ்ட், சாகித்திய அகாதமி முதலான மொழிபெயர்ப்பில்
ஈடுபட்டுள்ள அரசுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் என்றவகையில் இத்திட்டத்தின்
ஆட்சிக்குழுவை அமைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, பொதுத் துறை, தனியார்
துறை பங்கேற்பினை உறுதிசெய்யும் வகையில் அமைந்த படிமத்தில் உருவாக்கப்படவேண்டும் என்ற
தேசிய அறிவுசார் ஆணையம் மற்றும் திட்டக்குழுவின் வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாக இருக்கும். இணைச்செயலர் (மொழி),
நிதி ஆலோசகர், மனித வள மேம்பாட்டுத்துறை ஆகியோர்களின் பிரதிநிதிகள், தலைவர், தேசிய
அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையத்தின் தலைவர் ஆகியோர் இத்திட்டத்தின்
அலுவல்சார் உறுப்பினர்களாக இருப்பர். இந்த ஆட்சிக்குழுவானது ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் மாற்றியமைக்கப்படும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
3. இத்திட்டத்தின் பொதுக்குழுவானது 101 உறுப்பினர்களுடன் தொடங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் இருந்து ஆட்சிக்குழுவிற்கு ஆலோசனைகள் அளிக்கும்வகையில் மூன்று அடுக்குகளிலும்
கருத்துப் பரிமாற்றம் செய்யவல்லதாக இதன் கட்டமைப்பு இருக்கும். மொழிபெயர்ப்புத் தொழில்துறையைச்
சார்ந்த வல்லுநர்கள், பல்வேறு மொழிபெயர்ப்புச் சங்கங்கள், தனிப்பட்ட நூலாசிரியர்கள்,
சொற்களஞ்சிய ஆசிரியர்கள், பல மொழி இணைகளைச் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்கள், தேசிய அறிவியல்,
தொழிநுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையம், நேஷனல் புக் ட்ரஸ்ட் , சாகித்திய அகாதமி, இந்திய
சமூக அறிவியல் ஆய்வு மன்றம் (ICSSR), இந்திய தத்துவ ஆய்வு மன்றம் (ICPR) போன்ற நிறுவனங்களின்
தலைவர்கள், இயக்குநர்கள், செயலர்கள், பல்கலைக்கழகங்களில் இந்தி,ஆங்கிலம், மொழியியல்,
ஒப்பியல் இலக்கியம் அல்லது முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முதுகலைப் பட்டயப்படிப்பு முதலிய
பாடப்பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்புத் திட்டங்களைச் சார்ந்த கல்வியாளர்கள்,
மற்றும் சட்டம், மருத்துவம், உடற்கல்வி அறிவியல், உயிர் அறிவியல், சமூக அறிவியல், இலக்கியம்,
கலை முதலான பிரிவுகளில் ஏற்கெனவே மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் இத்திட்டத்தின்
பொதுக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பர். மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர, மனித வள மேம்பாட்டு
அமைச்சம், உள்துறை (அலுவலக மொழிகள் துறை உள்ளிட்ட), தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை,
வெளியுறவுத் துறை போன்ற மொழிகள், மொழிபெயர்ப்புச் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அரசுத்
துறைகளின் பிரதிநிதிகள் பொதுக்குழுவில் இடம்பெறுவர்.
|
|
|