பின்னிணைப்பு -II

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்கான திட்டவரைவு
திரு ஜெயதி கோஷ் அவர்களால் தேசிய அறிவுசார் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது
(11 பிப்ரவரி 2006 இல் நடைபெற்ற தேசிய அறிவுசார் ஆணையத்தின் மொழிபெயர்ப்பிற்கான பயிலரங்கில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல்கள் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த விவாதங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது)

இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், வியாபாரம் முதலிய பல்வேறு களங்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் அறிவுசார் நூல்கள் மக்களுக்குச் சென்றுசேர்வதை உறுதிசெய்யும்வகையில் பல்வேறு வகையான மொழிபெயர்ப்புகளை (மனிதர்கள், எந்திரங்கள் மற்றும் உடனடி மொழிபெயர்ப்புகள்) அதிக எண்ணிக்கையிலும் உயர்த்தரத்துடனும் படைப்பது உடனடி தேவையாக உள்ளது. தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் என்னும் செயலாக்கத்தைக் கொண்டு நாட்டில் மொழிபெயர்ப்பினை ஊக்குவிக்குவித்தல், தரமான மொழிபெயர்ப்புகளை அனைவரும் பெறுதல் போன்ற இலக்குகளை அடையமுடியும். இத்திட்டமானது பணிகளைக் கண்டறிவதற்கான கால இடைவெளிகளைக் களைதல், உயர்தர மொழிபெயர்ப்புகளை மேம்படுத்துதல், பயிற்சிகளை அளித்தல், மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய தகவல்களைப் பரப்புதல், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மொழிபெயர்ப்புப் பணிகளை ஒருங்கிணைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும். செய்த பணிகளைத் திரும்ப செய்வது அல்லது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் செய்த பணிகளைச் செய்வது என்பதற்காக இத்திட்டம் தொடங்கப்படவில்லை. மாறாக அவ்வமைப்பின் முன்னுரிமைகளை மறுஆய்வு செய்யவும் தரத்தினை உயர்த்தவும் மற்றும் அவர்களது படைப்புகளைப் பற்றிய செய்திகளை அனைவரும் பெறுவதற்கான வழிவகை செய்ய உதவுதல் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியத் துணைக்கண்டத்தில் நீண்ட காலமாக மொழிபெயர்ப்புத் தொடர்பான பணிகள் பல்வேறு இணை மொழிகளிடையே நடைபெற்று வந்துள்ளன. மொழிபெயர்ப்பானது பெரும் கலாச்சாரமாக இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள பல்வேறு மொழி குடும்பங்களைச் சார்ந்த அறிஞர்களால் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில் சவால் மிகுந்த, பெரும் ஆதாயம் அளிக்கின்ற தொழிலாக மொழிபெயர்ப்பானது உருவெடுத்துள்ளது. மொழியியல், தத்துவம், இலக்கியக்கல்வி, நோய்க்குறி நூல், அகராதியியல், கணினியியல் மற்றும் பல்வேறு துறைகளில் வெளிவந்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் ஆராய்ச்சித் துறையாக இருந்த மொழிபெயர்பானது இன்று ஒரு தனித்துறையாக வெளிப்பட்டுள்ளது. மொழிகள், கலாச்சாரங்கள், நாடுகள் போன்றவற்றில் மொழிபெயர்ப்புகள் பரவியுள்ளதைக் கருத்திற்கொள்ளும்போது இத்துறையில் போதிய அளவில் ஒருங்கிணைக்க தேவையான நடவடிக்கைகளைப் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிறது.

ஒரு பழம்பெரும் அறிவுத்தளத்தை உடைய நாடான இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக, பன்மொழி பேசுகின்ற, பல்வேறு கலாச்சாரங்களைக் கடைப்பிடிக்கின்ற மக்களால் மொழிபெயர்ப்பானது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டில் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதனால், இலக்கிய மற்றும் எந்திர மொழிபெயர்ப்புகள் போன்ற பெரும் முயற்சிகளைத் தொடங்குவதற்கான அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. முன்மொழியப்பட்டுள்ள தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது, ஆசிரியர்கள், கற்போர், மொழித் தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகக் குழுக்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிற ஊடகங்கள், படைப்பிலக்கிய எழுத்தாளர்கள், வாசகர்கள், ஒப்பியல் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நீண்டக்காலத் தேவையைப் பூர்த்திசெய்யும் என நம்பப்படுகிறது.

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு:
1. இந்திய மொழிகளில் படைக்கப்படும் மொழிபெயர்ப்புத் தொடர்பான அனைத்து தகவல்களையும் பாதுகாக்கும் இடமாகவும் மொழிபெயர்ப்பைச் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய செய்திகளை உருவாக்குதல், பராமரித்தல், வெளிவந்துள்ள செய்திகளைப் புதுப்பித்தல், பயிற்சித் திட்டங்களை வகுத்தல், மொழிபெயர்ப்பிற்குத் தேவையான சாதனங்கள், கருவிகளை உருவாக்குதல், புதிய தொழில்நுட்பங்களான தேசிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேட்டைப் பராமரித்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளுதல்.
2. கூடியவரையில் அனைத்து இந்திய மொழிகளிலும் செயல்முறை மற்றும் வரைமுறை சார்ந்த இருவடிவங்களிலும் உள்ள அனைத்துவிதமான மொழிபெயர்ப்புத் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்தல், மேம்படுத்துதல், பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு தெளிவுபடுத்தும் நிலையமாக செயல்படுதல்.
3. இந்திய மொழிகளில் நடைபெறும் மொழிபெயர்ப்புத் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிமனிதர்களிடையே இணைப்பை ஏற்படுத்துதல்.
4. இந்தியா, மற்றும் பிற உலக நாடுகளில் தனது உயர்தரமான மொழிபெயர்ப்புகளின் வாயிலாக இந்திய மொழிகளையும் இலக்கியங்களையும் முன்னிறுத்துத
5. மொழிபெயர்ப்புக் கருவிகளை உருவாக்குதல் குறிப்பாக, இருமொழி மற்றும் பன்மொழி இருதிசை மொழிபெயர்ப்பிற்கான சிறப்பு அகராதிகள், வேர்டு பைன்டர்ஸ், சொற்களஞ்சிய அகராதிகள் போன்றவற்றை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்.
6. இத்துறையில் ஆர்வமுடைய நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு உதவிசெய்யும் வகையில் தனித்து அல்லது மற்ற நிறுவனங்களுடன் இணைந்து மொழிபெயர்ப்புத் தொடர்பான நூல்களை அச்சிடுதல் மற்றும் மெய்நிகர் வெளியீட்டிற்கு உதவிசெய்தல்.
7. மக்கள் இத்திட்டத்தினைப் பற்றிய தங்கள் கேள்விகளை அனுப்பி தேவையான ஆலோசனைகள் பெற உதவிடும் வகையில் அறிக்கைப் பலகை ஒன்றை உருவாக்குதல்.
8. ஒழுங்குமுறை மொழிபெயர்ப்பை மேற்கொள்ள வழிகாட்டுதல் மற்றும் மொழிபெயர்ப்புக் கல்வியில் புலமை மற்றும் பயிற்சிப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

முன்மொழியப்பட்டுள்ள தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முக்கிய நடவடிக்கைகள்
மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சி.
மொழிபெயர்ப்பிற்கு இருமொழிகளில் புலமை அவசியமாகத் தேவைப்படுகிறது. மேலும் தேவையான சிறப்புக் கூறுகளில் பயிற்சி அவசியம் என்பதையும் இது காட்டுகிறது. வெவ்வேறுபட்ட மொழிபெயர்ப்புகளை மேற்கொள்ள, தனித்தனித் திறமைகள் தேவைப்படுகிறது. உதாரணமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மொழிபெயர்ப்புகளை மேற்கொள்ள தனித் திறமையும், பயிற்சியும் தேவைப்படுகிறது. வானொலி, தொலைக்காட்சிப் போன்ற ஊடகங்களில் முழுவளர்ச்சியடையாத நிலையில் உள்ள பொருள் விளக்கமளித்தலுக்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவும்வகையில் சிறப்புப்பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

இப்பணிகளில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் நடவடிக்கைகள் பின்வருமாறு:
  » குறுகிய காலப் பயிற்சித் திட்டங்களை நடத்துதல்.
  » மொழிபெயர்ப்பாளர்களுக்கு என்று பாடத்திட்ட பயன்பாட்டுத் தொகுப்பு ஒன்றினை உருவாக்குதல் இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் மொழிப் பயிற்சிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இணைத்தல்.
  » றுவனங்களிடையே கல்வியாளர்களைப் பறிமாற்றம் செய்துகொள்ள உதவும் வகையில் ஆய்வு உதவித்தொகைகள் வழங்குதல். இன்னும் சிறப்பபாக வலியுறத்திச் சொல்வதென்றால் ஆங்கிலத்திலிருந்து அல்லது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்வது என்ற நிலையில் அல்லாமல் இந்திய மொழிகளுக்கு இடையே மொழிபெயர்ப்புகள் மேற்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  » குறிப்பாக மாணவர்களின் ஆராய்ச்சி உள்ளிட்ட ஆய்வுத்திட்டங்களை ஊக்குவித்தல். வழிகாட்டி நூல்களாக அடையாளம் காணப்பட்டுள்ள உள்ள சிறந்த மொழிபெயர்ப்புக்கள், ஆசிரியர்களின் போதனை செய்வதற்கு உதவிடும் நூல்கள் போன்ற வளங்களை உருவாக்குதல்.

தகவல்களைப் பரப்புதல்.
நம் நாட்டில் தற்போது மொழிபெயர்ப்பானது புகழ்பெற்ற, பெரும் வெகுமதியளிக்கும் துறையாக இல்லை. மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் பற்றிய அறியாமை மக்களிடையே காணப்படுகிறது. பெருமளவு பயன்படுத்துவோருக்குக் கூட மொழிபெயர்ப்பின் பலன் பற்றிய முழுமையான தெளிவு இல்லை எனலாம். திறமைவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிட்ட மண்டல மொழிகளில் இருந்தபோதிலும் அவர்களின் சேவைகளை பிற வகையில் பயன்படுத்தும் வண்ணம் அவர்களைப் பற்றிய விவரங்கள் சரிவர பதிப்பகத்தாரைச் சென்றடையவில்லை. மைசூரில் இயங்கும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஆண்டுதோறும் 20 இந்திய மொழிகளில் சுமார் 400 ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஏழு நகரங்களில் அமைந்துள்ள தனது மண்டல மொழிகள் மையங்களில் இருந்து பயிற்சியளிக்கிறது. மண்டல மொழிகளில் புலமையுள்ள இவ்வாசிரியர்களுக்கு மற்றொரு இந்திய மொழியில் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சியானது அனைவராலும் பெருமளவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புத் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இப்பயிற்சியாளர்கள் (தற்போது சுமார் 11,000 பேர்) பற்றிய விவரங்கள் சரிவர போய் சேரவில்லை. பல மொழிகளில், சிறிய நூல் வெளியீட்டாளர்களால் குறிப்பிடத்தக்கவகையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிட்டிருந்தாலும் இவர்களின் வெளியீடுகளின் விவரங்கள் பெரும்பான்மையினருக்குத் தெரியாமல் உள்ளன.

இப்பணிகளில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முக்கியமான நடவடிக்கைகள் பின்வருமாறு:
  » வெவ்வேறு துறைகளில் புலமை மற்றும் கல்வித் தகுதிப் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய தரவுக் களஞ்சியம் ஒன்றை உருவாக்குதல். குறிப்பிட்ட பணிகளை வேண்டுவோர் இணையத்தளத்தை அல்லது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தை அணுகும்வகையில் இக்களஞ்சியமானது உருவாக்கப்படும்.
  » தரவுக் களஞ்சியம் ஒன்றை உருவாக்குதல் மற்றும் ஏற்கெனவே காணப்பெறும் மொழிபெயர்ப்புகளின் குறிப்புரை விபரங்கள் தொடர்பான பல்வேறு பணிகள் புதுப்பிக்கப்பட்டு பிரிவுகள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுக் கல்வி நிறுவனங்களுக்கும் நூலக வலையமைப்புகளுக்கும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும்.

தரம்வாய்ந்த மொழிபெயர்ப்புகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் பிரபலப்படுத்துதல்.
பல்வேறு துறைகளில் தேவைப்படும் வெவ்வேறு வகையான மொழிபெயர்ப்புகள் சந்தையில் பெருமளவில் ஏற்கெனவே விற்பனை செய்யப்படுகின்றன என ஒருத்தரப்பினர் வாதிடலாம். ஆனால் உண்மையான நிலவரத்தினை அறியாத நிலையே முழுத்தேவை என்ன என்பதைத் அறிய இயலாமல் செய்கின்றது. பல்வேறு துறைச்சார்ந்த நூல்கள் பெருமளவில் இருக்கும்போது அதனை நடைமுறையில் பயன்படுத்தும் நிலை ஏற்படாதவரை நீங்கள் எதைத் தவறவிட்டுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் கிரந்த அகாதமி போன்ற இலக்கியங்கள் சார்ந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வட்டார மொழிகளில் இவ்விலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படும்போது அவற்றின் தேவை பெருமளவில் அதிகரித்துள்ளதை ஒப்புக்கொள்கின்றன.

இதில் முக்கியமானது இத்தகைய மொழிபெயர்ப்புகள் ஒருவழிப் பாதையாக அதாவது ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு என்றில்லாமல் இந்திய மொழிகளில் உள்ள கலைச்செல்வங்களை ஆங்கிலத்திற்கும் பிற இந்திய மொழிகளுக்கும் பெருமளவு பரவும்வகை செய்யவேண்டும். இணையான மொழிபெயர்ப்பினை மேற்கொள்ளும் மரபினை ஊக்குவிக்கவேண்டும். இந்தியாவின் பன்மொழி மற்றும் கலாச்சார வேற்றுமையினை மேம்படுத்தும் வண்ணம் மொழிபெயர்ப்பானது கொடையளிக்கும் மற்றும் பெறும் மொழிகளுக்கு இடையே நேரெதிரான மாற்றங்களை ஏற்படுத்தாமல் கிடைக்கோடான கருத்தியல்களாகப் பரவவேண்டும். சில இடங்களில் மொழிபெயர்ப்பானது பெருமளவில் பெருகியுள்ளது. உதாரணமாக, முனைவர் அம்பேத்கார் அவர்களின் பணிகள் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவை, சமுதாயத்தின் பரவலான தேடுதலை உணர்த்துவதாகவும் புதிய இலக்கிய குழுக்களின் இலக்கிய ஆர்வத்தையும் புலப்படுத்துகின்றன.

பிற இலக்கிய மொழிபெயர்ப்புகளைப் போல் அல்லாமல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பினை மேற்கொள்ளும்போது சொற்கள், பொதுக் கருத்து போன்றவற்றை செந்தரப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொழிகளை நன்கு புரிந்துகொள்ளவும் மொழிகளிடையே எளிதில் இயங்கவும் முடியும். மேலும், இன்று மொழிபெயர்ப்பானது, சமூக அங்கீகாரம், பணம் சார்ந்த ஊதிய நிலைகளை வழங்குதல் போன்றவற்றில் குறைந்த அளவில் வெகுமதியளிக்கும் நடவடிக்கையாக உள்ளது. எனவே, இந்நிலையானது மாற்றப்படவேண்டும். மொழிபெயர்ப்பானது தனி ஒருவரால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கையாக இருந்தபோதிலும் இம்முயற்சிகளில் வெற்றிபெற பல்வேறு தரப்பட்ட மக்களைப் பல்வேறு நிலைகளில் ஈடுபடுத்த வேண்டும் மற்றும் கூட்டு முயற்சி இதற்கு அவசியம் என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இத்தருணத்தில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் பின்வரும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் ஆராயத்தக்கன:
  » நூல் விற்பனைத் தொடக்க விழாக்கள், விழாக்கள், ஆய்வு உதவித்தொகைகள், பரிசுகள் போன்றவற்றின் மூலம் தரமான மொழிபெயர்ப்புக்களை ஆதரித்தல்.
  » ஒருங்கிணைந்து கூட்டுறவாக மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொள்வது, பல மொழிபெயர்ப்பாளர்கள் இணைந்து மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் நீண்ட கால திட்டங்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களது அனுபவம், எண்ணங்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் பயிலரங்குகள் நடத்துதல் போன்றவற்றிற்கு ஆதரவளித்தல்.
  » பதிப்பகங்கள் மற்றும் நூலக பிணையங்களுடன் மறுகொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை ஏற்படுத்தி தரமான மொழிபெயர்ப்புகளுக்கான தொடக்கநிலை வணிகவாய்ப்பு ஒன்றை உறுதிசெய்தல்.
  » மொழிபெயர்ப்பிற்கான மூலப் பொருட்களை உருவாக்குபவர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அல்லது நுகர்வோர் (பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள்) ஆகியோருக்கிடையே ஒரு இடைமுகமாக செயல்படுதல்.
  » நடப்புச் செய்திகளை வெளியிடும் இதழ்கள், பிற பயனுள்ள சுவையான செய்திகள் (நியூ சயின்டிஸ்ட், பொலிட்டிகல் வீக்லி முதலான) போன்றவற்றை மண்டல மொழிகளில் மிகப் பரவலாக பரப்புவதற்குத் தேவையான மொழிபெயர்ப்பை தொடங்குவதற்குரிய உதவிகளை வழங்குதல்.
  » அனைத்து நிலைகளிலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படுகின்ற குறிப்பாக இலக்கியம் தொடர்பான பாடத்திட்டங்களில் மொழிபெயர்ப்பு தொடர்பான செய்திகளை ஒருங்கிணைக்க வலியுறுத்துதல்.
  » அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மொழி வள மையங்கள் அமைக்கவும், பள்ளிகளில் நூல் மூலைகள் (மொழிபெயர்ப்பு தொடர்பான செய்திகளைக் கையாள்வதற்கு) உருவாக்கவும் வலியுறுத்துதல்.
  » இருமொழிப் புலமை தேவைப்படும் செயல்பாடுகளை எடுத்துக்காட்டாக கர்நாடக காவல்துறை அலுவலர் தேர்வின் கட்டாய மொழிபெயர்ப்பு பிரிவினை போன்று மக்கள் அறியாமல் இருக்கின்ற செயல்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பிரபலப்படுத்துதல்.
  » இந்தியாவில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெருமளவிலான மொழிபெயர்ப்புச் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பொதுத்துறை மற்றும் குடிமுறை சமுதாய அமைப்பு (தேசிய எழுத்தறிவு இயக்கம், பாரத் கியான் விக்யான் சமிதி) போன்றவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல்.

எந்திர மொழிபெயர்ப்பை ஊக்குவித்தல்
வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பங்கள் குறைந்த செலவில் வேகமான, பெருமளவிலான மொழிபெயர்ப்புக்களைப் அளிக்கின்றன. எனினும், இப்பணிகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மனித வளங்கள் என்ற இரு சிக்கல்கள் நீடிக்கின்றன. இத்திட்டம் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி, தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கவும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயின்படுத்தி எந்திரவழி மொழிபெயர்ப்பை மேற்கொள்வதை எளிதாக்கவும் உரிய உதவிகளைச் செய்யும்:
  » தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலை உறுதிசெய்தல்: வினைதிறன் மிக்க, திறம்பட்ட மொழிபெயர்ப்புகளை அளிக்க உதவக்கூடிய இலக்கமுறை கருவிகளான பொருளியைபுச் சொற்களஞ்சியங்கள், இருமொழி அகராதிகள், மொழிபெயர்ப்பிற்கான நினைவக மென்பொருள் போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த பயன்பாட்டுத் தொகுதிகளை உருவாக்குதல்.
  » மின்அகராதிகள், வேர்டுநெட், மொழி பகுப்பாய்வு மற்றும் உருவாக்கக் கருவிகள், சொற்தொகுப்பு விளக்கப்பட்டியல்கள், அலைவெண் பகுப்பாய்விகள் போன்ற மொழியின் சொல்லாக்க வளங்கள் எந்திரமொழிபெயர்ப்பு அமைப்பிற்குத் தேவைப்படும் இன்றியமையாத ஆக்கக்கூறுகளாகும். தனி ஒரு நிறுவனத்தால் இவற்றை செயற்படுத்துதல், பராமரித்தல் என்பது மிகவும் கடினமாகவும் நீண்ட கால ஒப்பந்தங்கள் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையிலும் இப்பணிகள் உள்ளன. எனவே, தொடர்ச்சியான கூட்டங்கள், இணையவழி கலந்தாய்வுகள் நடத்துவதன் மூலம் தொடர் தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்து, குழுவாக செயல்பட ஏதுவான ஒரு தளத்தினைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கும்.
  » மூல நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை கூடியவரையில் தெளிவான இலக்கமுறை வடிவத்தில் பெறப்படவேண்டிள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் இப்பணிகள் தொடர்பான பதிப்புரிமைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது. இந்த இலக்கமுறை மூலப்பொருட்களைச் செந்தரப்படுத்தப்பட்ட விரிவாக்கக் குறியீட்டு மொழி ஒட்டுக்கள் மற்றும் ஆவண வகை வரையறைகள் போன்றவற்றைக் கொண்டு தொடர்ந்து பராமரிப்பதைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் உறுதிப்படுத்தும்.
  » குறிப்புரைகள் மற்றும் சீர்மைநிலை கொண்ட உயர்தர இணை விரிதரவினை உருவாக்குதல் என்பது இன்றுள்ள சர்வதேச போக்காகும். இதுபோன்ற குறிப்புரை விரிதரவுகள் எந்திரம் கற்றல் தொழில்நுட்பங்கள் மூலமாக எந்திர மொழிபெயர்ப்புக்கு உதவுகின்றன. இத்தரவுகளின் முழு பரிமாணம் மற்றும் இம்முயற்சியின் பருமன் முதலியவற்றை நோக்கும் போது இதற்கு போதுமான தொடக்க முதலீடுகள் அவசியமாகின்றது. இவற்றை நிறைவேற்ற தனி ஒரு நிறுவனத்தால் இயலாது. எனினும், NTM இத்தகு நடவடிக்கைகள் சாத்தியமாவதற்குத் தேவையான உதவிகளை வழங்கும்.
  » 1996 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் 15 நாடுகளை உள்ளடக்கித் துவக்கப்பட்ட ‘உலகளாவியப் பிணைய மொழி’(UNL) என்ற வழிமுறையைச் சார்ந்த அனைத்துலக மொழி அடிப்படையில் அமைந்த அணுகுமுறை ஒன்றை மேம்படுத்துதல். (ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் எந்திர மொழிபெயர்ப்பை மேற்கொள்வது தொடர்பான பல்வேறு கருவிகளையும் தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களையும் இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை ஏற்கெனவே உருவாக்கிள்ளது, அவற்றைப் பொதுநிலைக்குக் கொண்டுவரவேண்டும்.)