முடிவுகள்

இந்தியா தன் சிந்திப்பதற்கான சுதந்திரத்தை நிலைநாட்டவும் தனது சிக்கல்களுக்குத் தானே பொறுப்பேற்கும் விருப்பத்தை நிலைநிறுத்தவும் பல்வேறு தரப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து சமத்துவத்தோடு வாழ்வது என்ற பொதுகுறிக்கோளைத் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் தற்போது படிப்படியாக ஒரு முதிர்ச்சியடைந்த மக்களாட்சி நாடாக கம்பீரமாக நடைபோடும் நிலையில் உள்ளது. மொழிகள் நமது பல்வேறு பண்பாடுகளின் ஆன்மாவாகவும் பன்மொழித்தன்மை என்பது நமது வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது. மாபெரும் வலிமையுள்ள மக்களாட்சி நாடாக நிலைத்திருக்க இந்திய நாட்டின் மக்களை முழு அளவில் மக்களாட்சியில் பங்கேற்கச் செய்வது என்பது அவசியமாகும். இதற்கு நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் இந்திய மொழிகளின் வளர்ச்சி என்பது ஒரு இன்றியமையாத பகுதி என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். நமது பண்பாடு மொழிகல்வியின் முக்கியத்துவத்தை என்றும் உணர்ந்துள்ளது. வேத காலத்தில் அறிவைக் குறிக்கும் ஆறு கிளைகளில் நான்கு கிளைகளான சிக்ஷா (இச்சொல் ‘ஒலிப்பியல்’ என்னும் பொருளுடையது, ஆனால் தற்காலத்தில் கல்வியைக் குறிக்கும் பொதுச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது), வியாக்கரன்-‘இலக்கணம்’, நிருக்தா-‘சொற்பிறப்பியல்’, சந்தஸ்- ‘யாப்பிலக்கணம்’ என்ற இவையாவும் மொழியோடு தொடர்புடையனவாகும். இந்திய இலக்கண ஆசிரியர்களின் உயர்தரப் படைப்புக்களானது (சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இரண்டிலும்) அறிவியலைத் துணையாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் மொழி ஆராய்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. நவீன மொழிக்கோட்பாடுகள் பல நமது முன்னோர்களின் இலக்கணப் படைப்புகளில் இருந்து மிகுந்த பயனைத் தொடர்ந்து பெற்றுவருகின்றன. ஒரு காலக்கட்டத்தில், இந்தியாவில் இருந்து பல்வேறு அறிவுசார் நூல்களின் மொழிபெயர்ப்புகள் ஆசியாவின் பல்வேறுப் பகுதிகளுக்கும் பரவின. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இதே முறையைப் பயன்படுத்தியே நாம் மேலைநாட்டுக் கருத்துக்களை இந்தியாவிற்குக் கொண்டுவந்தோம். இதன் பயனாக கடந்த நூற்றாண்டில் அறிவுதுறைகளில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் இதுவரை நடந்துள்ளது என்னவெனில், பெருமளவிலான அறிவுசார் நூல்கள் மேலை நாடுகளில் இருந்து செங்குத்து அமைவாகவும் மற்றும் ஒருங்கு திசையிலும் நமது நாட்டிற்கு வந்தன. நாம் இதுவரையில் பெரும்பான்மையான கல்வித்துறைகளிலும் மற்றும் பல இடங்களிலும் ஆங்கிலத்தில் அமைந்த நூல்களையே கற்றுத் தந்துகொண்டிருக்கிறோம். கற்பித்தலுக்கான மூல நூல்கள் பெருநகரங்களுக்கு வெளியே வட்டார மொழிகளில் கிடைப்பது கடினமென்றாலும் இம்மொழிகளிலேயே கற்பித்தல் நடைபெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலம் வணிக மொழியாகவும் தகவல்தொடர்பு மொழியாகவும் மிகுந்த அளவில் விரிவடைந்துள்ளது. ஆனால் மூன்றாம்நிலை கல்வியான உயர்நிலைக் கல்வியில் பயிற்றுமொழி என்ற அதிகாரத்தை மிக மோசமாக இழந்துவருகிறது. இவ்வாறு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மொழிமாற்றமானது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் கற்பிக்கும் மொழிகளுக்கும் பயிற்று மொழிகளுக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளியானது ஏற்பட்டுவருகிறது.

அனைத்து மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளும் தொழில்நுட்பங்களை முன்னேற்றுவதைக் கருத்திற்கொண்டு அமையவேண்டும். நமது மொழிகளும் மற்றும் இலக்கண விளக்கங்களும் தரவகம் ஒன்றை உருவாக்கவும் இயற்கை மொழியாய்வுச் செயலாக்கத்திற்கான வழிமுறையைக் காணவும் உதவிபுரியும். தகவல் தொழில்நுட்பத் துறைகளில் நாம் அசுர வளர்ச்சியை நாம் பெற்றுவருகிறோம். இத்துறையின் முன்னேற்றங்கள், எந்திர உதவி மொழிபெயர்ப்பிற்கான நடவடிக்கைகளில் பெரிதும் உதவிசெய்யும் என நம்பப்படுகிறது. எல்லா இந்திய மொழிகளையும் தொழில்நுட்பச் சாதனங்களைக்கொண்டு ஒருங்கிணைப்பதால் சமூகத்தின் மேம்பாட்டுக்குக் கட்டாயம் உதவும் என்பதாலும் மொழிபெயர்ப்புச் செயல்பாட்டினை வேகப்படுத்தும் என்பதாலும் இதில் சம்மந்தப்பட்ட எல்லோரும் போதிய பணியினைச் செய்வார்கள் என்று நம்பப்படுகிறது.

மனித குலத்திற்குக் கிடைத்துள்ள விலைமதிப்பற்ற அரிய சொத்துக்கள் என்பவை மொழிகளாகும். இம்மொழிகள் காலத்தையும் இடத்தையும் இணைக்கும் பாலமாக அமையவேண்டும். சில அச்சுறுத்தும் சக்திகள் மொழிகளில் சிலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றிற்கிடையேப் பிரிவினையைத் தோற்றவிக்கவும் முரண்பாடுகளை ஏற்படுத்தவும் நினைப்பதற்கு மாறாக நாம் செயல்பட்டாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். நமது மொழிகள் சிறந்த வளங்கள் என்பதையும் பன்மொழியம் என்பது ஒரு சொத்து என்ற தெளிவான செய்தியை நாம் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும். நம்முடைய மொழிகளின் உயர்வு நமது உயர்வு, நமது உயர்வு நமது அறிவின் வளர்ச்சியோடு தொடர்புடையது. மக்களாகிய நமது விதியானது நமது மொழிகளின் விதிகளோடு விடுவித்துக்கொள்ள இயலாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நாம் உணர்ந்துள்ளோம். ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எளிதாக அறிவு இடமாற்றம் நடைபெறும்வகையில் நாம் ஒரு பண்பாட்டை உருவாக்கவேண்டும். இங்கு குறிப்பிடப்பட்ட தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது, இந்தியாவில் அறிவின் அடிப்படையில் அமைந்த ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கும் கல்விப் பரிமாற்றங்களுக்கும் அனைத்துவிதங்களிலும் மொழியின் வளர்ச்சிக்கு உதவிகரமாக அமையும் கருவியாக விளங்கும்.