மேலாண்மை ஏற்பாடுகள்

நிர்வாகம்

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமானது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தினைச் செயற்படுத்தும் இணைப்பு நிறுவனம் என்பதால் திட்டத்தினைத் துவக்கும் பணிகள், நடைமுறைப்படுத்துதல் முதலான பணிகளை மேற்கொள்ளும். இத்திட்டத்தினைச் செயற்படுத்தும் இணைப்பு அலுவலராக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன இயக்குநர் செயற்படுவார். தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர், இத்திட்ட வழிகாட்டும் குழுவின் (NTM-PAC) உறுப்பினர் செயலராக இருப்பார்.

தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட வழிகாட்டும் குழு (NTM-PAC)

தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட வழிகாட்டும் குழுவின் கட்டமைப்பு பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது:
இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் தலைவர்
இணைச் செயலர் (மொழி) அல்லது இயக்குநர் (மொழி), உயர்கல்வித்துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு அவர்களின் பிரதிநிதியாக ஒரு நியமன உறுப்பினர் உறுப்பினர்
இணைச்செயலர் மற்றும் நிதி ஆலோசகர் (JS & FA)அல்லது IFD (HRD) மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு அவர்களின் பிரதிநிதியாக ஒரு நியமன உறுப்பினர் ஒருவ உறுப்பினர்
தலைவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையம், புது டெல்லி உறுப்பினர்
பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பைப் பயிற்றுவிக்கும் துறைகளின் பிரதிநிதிகளாக இருவர் உறுப்பினர்
மொழி மற்றும் மொழிபெயர்ப்பினைச் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் கல்வி நிறுவனங்களில் இருந்து மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருவர்(சுழற்சி முறையில்) உறுப்பினர்
மொழிப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஒருவர் (சுழற்சி முறையில்) உறுப்பினர்
நூல் விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்களின் பிரதிநிதிகளாக மூவர் உறுப்பினர்
செயலர், சாகித்திய அகாதமி உறுப்பினர்
இயக்குநர், நேஷனல் புக் ட்ரஸ்ட் உறுப்பினர்
மொழிபெயர்ப்பிற்கு உதவிசெய்யும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காகப் பாடுபடும் இந்திய அறிவியல் கழகங்கள் , தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் இவை போன்ற பிற நிறுவனங்களின் சார்பில் பிரதிநிதிகளாக இருவர் உறுப்பினர்
மொழிபெயர்ப்பில் தனித்திறன் கொண்ட வல்லுநர்கள், மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளில் ஆர்வமுடைய தனியார் நிறுவனங்கள், சங்கங்கள் அல்லது தனிநபர்கள் ஆகியோரின் சார்பில் எட்டு பிரதிநிதிகள் உறுப்பினர்
திட்ட இயக்குநர், தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (திட்ட இயக்குநர் பொறுப்பில் இல்லாத சமயங்களில் கல்விச் செயலர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்) உறுப்பினர் செயலர்

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் உறுப்பினர்கள்

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் நடவடிக்கைகளில் ஆர்வமுடைய தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுவோர், நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உறுப்பினர்களாகலாம். இத்திட்டத்தில் உறுப்பினராவதற்கான வழிமுறை மற்றும் எவ்வாறு பதியவேண்டும் என்ற விவரம் அனைவரும் எளிதில் காணும் வகையில் இணையத்தளத்தில் வழிவகை செய்யப்படும்.

திட்ட இயக்குநர்

இணைச் செயலர் (மொழி) மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவர்களைத் தலைவராகவும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் இயக்குநர் அவர்களை உறுப்பினர் செயலராகவும் மற்றும் மூன்று உறுப்பினர்களும் (தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் வழிகாட்டும் குழுவிலிருந்து இருவரும் மற்றும் அரசுச் செயலர், உயர்நிலைக் கல்வித்துறை அவர்களின் சார்பில் நியமன உறுப்பினர் ஒருவரும்) கொண்ட குழுவால் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இயக்குநர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவார். இத்திட்ட இயக்குநராக நியமிக்கப்படுவதற்குக் கீழ்க்கண்ட இன்றியமையாத தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:

(i) தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இயக்குநர் 5 ஆண்டுகாலத்திற்கு நியமிக்கப்படுவார்.
(ii) பொதுவாக 60 வயதிற்கு குறைவானவராக இருத்தல் வேண்டும்.
(iii) பரிந்துரைக்கப்படும் வல்லுநர் மொழிபெயர்ப்பு அல்லது ஏதாவது ஒரு மொழி அல்லது இலக்கியம் (ஒப்பிலக்கியம் உட்பட) அல்லது மொழியியல் போன்ற ஒரு துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும்/ அல்லது மொழிபெயர்ப்புத் துறையில் குறிப்பிடத்தக்கப் பணியாற்றி இருக்கவேண்டும்.
(iv) குறைந்தது 15 ஆண்டுகள் ஆசிரியர் பணி /ஆராய்ச்சிப் பணியாற்றியிருக்க வேண்டும்.
(v) மொழிபெயர்ப்புக் கல்வி, அகராதியியல் போன்றவற்றில் நூல்கள் வெளியிட்டிருக்கவேண்டும், மற்றும்
(vi) நூல்கள் வெளியிட்டதற்கான சான்றுகள் அளிக்கவேண்டும்.

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன இயக்குநருக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கவேண்டும். இத்திட்டத்திற்கான இணைப்பு அதிகாரியாக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன இயக்குநர் அவர்கள் செயற்படுவார். நிறுவனங்களுக்கு இடையயேயான உடன்படிக்கைகள், வேலைகளுக்கான ஒப்பந்தங்கள், பத்திரங்களில் கையெழுத்திடுதல் முதலிய பணிகளை இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன இயக்குநர் மேற்கொள்வார். இதற்கான அடிப்படை பணிகள், கடிதப்போக்குவரத்துக்களைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இயக்குநர் மேற்கொள்வார். கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்வது தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இயக்குநரின் கடமையாகும்:


(a) நிறுவனத்தின் மூலம் இவரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள பதிவேடுகள், வெளியீடுகள்/ மின்வெளியீடுகள் முதலான சொத்துக்களைப் பாதுகாத்தல்;
(b) திட்டத்தின் அலுவலர்கள் சார்பாக அலுவலகக் கடிதப்போக்குவரத்துக்களை மேற்கொள்ளுதல்;
(c) தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட வழிகாட்டும் குழுவின் தலைவரின் வழிகாட்டுதல்களின்படி திட்ட வழிகாட்டும் குழு மற்றும் பல்வேறு குழுக்கூட்டங்களைக் கூட்டுதல்;
(d) இக்குழுக் கூட்டங்களின் நடவடிக்கைகளுக்கான அறிக்கைகளைத் தயாரித்தல்;
(e) தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கணக்குகளைப் பராமரித்தல்;
(f) தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட வழிகாட்டும் குழுவின் நிபந்தனைக்குட்பட்டு தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முறையாகக் கையாளப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்தல்;
(g) திட்டத்திற்கான வரவுசெலவுத் திட்டங்களை ஒவ்வொரு நிதியாண்டுத் தொடக்கத்திலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன இயக்குநர் வாயிலாக அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்புதல்;
(h) இதுபோன்று ஆட்சிக்குழுவால் அளிக்கப்பட்டுள்ள நிர்வாகம் மற்றும் நிதித் தொடர்பான அதிகாரங்களைப் பயன்படுத்துதல்;
(i) மேற்குறிப்பிட்டவை தவிர இந்திய அரசானது எந்த நேரத்திலும் பதவியிலுள்ள திட்ட இயக்குநர் நடத்தைத்தவறி நடக்கும்போது அவருடைய நியமனத்தைப் பறித்து அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம்.

பதவிகளை நிரப்புதல்

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில் நிலையான பணியிடங்கள் எதுவும் தோற்றுவிக்கப்படமாட்டாது. தேவைப்படும் பணியிடங்கள் குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் நிரப்பப்படும். கூடியவரையில் பெரும்பாலான சேவைகள் வெளித்திறன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். முக்கியமான பணிகளை மேற்கொள்ள 65 திட்டப்பணியாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் டெல்லியில் உள்ள அலுவலகத்திலும் மற்றவர்கள் மைசூரிலும் பணியாற்றுவர். இது தவிர, குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளை மேற்கொள்ள இந்திய மொழிகளில் தனிச்சிறப்புப் பயிற்சிபெற்ற ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர்.

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில் பணிபுரிய கீழ்க்கண்ட முக்கியமான திட்டப்பணியாளர்கள் முதற்கட்டமாக நியமிக்கப்படுவர்:

வரிசை எண். தலைவர்
1. மனித வளம் (மொத்தம் 65)
(a) திட்ட இயக்குநர் (1) @ Rs.40,000 மற்றும்
(b) துணை இயக்குநர்கள்/பேராசிரியர்கள் (4) – அறிவியல் , தொழில் நுட்பம்,சமூக அறிவியல் மற்றும் கலை துறைகளில் இருந்து துறைக்கு ஒருவர் @ Rs.35,000 – 38,000
(c) ஆய்வு அலுவலர்கள்/ இணைப் பேராசிரியர்கள் (12)– வட இந்தியா,தென் இந்தியா,கிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் இருந்து@ Rs.29,000 – 32,000
(d) கீழ்நிலை ஆய்வு அலுவலர்கள்/மேல் நிலை விரிவுரையாளர் மற்றும் விரிவுரையாளர் (12) வட இந்தியாவி்ல் இருந்து ஒருவர் மற்றவர்கள் நான்கு மண்டலங்களில் இருந்தும் @ Rs.20,000 – 26,000
(e) ஆய்வு உதவியாளர்கள் (5) @ Rs.15,500 – 18,000
(f) மேல்நிலைப் பதிப்பாசிரியர்கள்/ வலைப் பதிப்பாசிரியர்கள்கள் (5) – ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் ஒருவர் மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் இருந்து ஒருவர் @Rs.24,000 – 26,000
(g) துணைப் பதிப்பாசிரியர்கள்- அச்சு மற்றும் வலை (5) - @ Rs.20,000 – 22,000
(h) நிர்வாக அலுவலர்கள் (வரவு செலவுக் கணக்கு) (1) @Rs.22,000
(i) அலுவலக மேற்பார்வையாளர் (2)
(j) மேல்நிலை திட்ட தொழில்நுட்ப நிபுணர் (4) @Rs.24,000 – 26,000
(k) கீழ்நிலை திட்ட தொழில்நுட்ப நிபுணர் (10) @Rs.20,000 – 22,000
(l) தரவு உள்ளீடு செய்பவர் (2) – ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகள்.
(m) அலுவலக உதவியாளர் – வரவுசெலவுக் கணக்கு (2)

11வது திட்டக்காலத்தில் ஏற்படும் மொத்த செலவினம் (மாறுதலுக்குரியது) : ரூ.4,26,53,012
 

அமைவிடம்

நிதிக்குழுவின் (EFC & PAMD) எண்ணத்திற்கேற்ப இத்திட்டமானது தனது அனைத்து நடவடிக்கைகளும் பெரும்பாலும் ஒரே கட்டிடத்தில், ஒரு கூரையின் கீழிருந்து செயற்படுத்தும் வகையிலும் நிலையான கட்டிடம் கட்டுவதைத் தவிர்க்கும் வகையிலும் அமைக்கப்படும். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இத்திட்டத்தைச் செயற்படுத்த, கண்காணிக்கத் தேவையான வசதிகளைப் பெற்றுள்ளதால், மைசூரில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன வளாகத்தில் முதலில் இத்திட்டத்தினைத் தொடங்குவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. மைசூரில் ஒரு அலுவலகம் இத்திட்டத்தின் செயல்பாட்டிற்காக வாடகைக்கு எடுக்கப்படும்.

தொடர்புடைய அரசு அலுவலகங்கள், தனியார்த்துறை, பொதுத்துறை நிறுவனங்கள், கணினி/மென்பொருள் வல்லுநர்கள், பதிப்பாளர்கள், தன்னாட்சிக் கலாச்சார அமைப்புகள், இந்திய, அயல் நாட்டு மொழிகளில் வல்லுநர்கள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு வழிகாட்டும் குழுக்கள், அறிஞர்கள் முதலானவர்களை தேசிய மொழிப்பெயர்ப்புத் திட்டத்தின் மூலம் அடிக்கடி தொடர்புகொள்ள வேண்டியிருப்பதால் இத்திட்டத்தின் இணைப்பு அலுவலகம் ஒன்றை டெல்லியில் (தேசியத் தலைநகர் என்பதோடு, பெரும்பாலான பதிப்பகங்கள், பல்வேறு கணிப்பொறி வல்லுநர்கள், பல்வேறுத் துறையைச் சார்ந்த மொழி அறிஞர்கள் உள்ளிட்டோரை எளிதில் சந்திக்க இயலும் என்பதாலும் பெரும்பாலான இந்திய அரசின் அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சிக் கலாச்சார மையங்களின் அமைவிடம் என்பதாலும்) துவங்குவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் ஒரு வாடகைக்கட்டிடத்தில் இருந்து செயல்படும் வகையில் ஒரு இணைப்பு அலுவலகம் அமைக்கப்படும்.

கால அளவு

பல்வேறு மொழிகளில் உள்ள இலக்கியங்கள் மற்றும் அறிவுசார் நூல்களின் தேவை உள்ளவரை இத்திட்டமானது தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அறிவுசார் நூல்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும் நாளும் புதிய நூல்களின் வரவுகள் தொடர்வதாலும் இத்திட்டத்தின் நடவடிக்கைகளுக்கான முடிவினைத் தற்போது முன்னுணர்வாக அறுதியிட்டுக் கூறுதல் என்பது மிகவும் கடினமாகும்.